உடனடி அமல்... சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உட்பட 39 முக்கிய மருந்துகளுக்கு விலை வரம்பு நிர்ணயம்!
இந்தியாவில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயப் பாதிப்பு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் வகையில், 39 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலையை மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடியாகக் கட்டுப்படுத்தி புதிய விலை வரம்பை நிர்ணயித்துள்ளது. டிரக்ஸ் விலை கட்டுப்பாட்டு ஆணை, 2013-ன் விதிகளின் கீழ் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்லோடிபைன், பிசோப்ரோலால் மற்றும் டெல்மிசார்டன் ஆகிய கூட்டு வீரியம் கொண்ட ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 14.74 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் மற்றும் அடோர்வாஸ்டாடின் அடங்கிய ஒரு கேப்ஸ்யூலின் விலை ரூபாய் 6.37 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டு மாத்திரை ஒன்றின் விலை ரூபாய் 14.88 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கால்சியம் மற்றும் வைட்டமின் டி3 மாத்திரை ஒன்றின் விலை ரூபாய் 8.93 என விலை வரம்பு செய்யப்பட்டுள்ளது.
ரேபிஸ் தடுப்பூசி மருந்து: வெறிநாய்க்கடிக்குச் செலுத்தப்படும் 'ஆன்டி-ரேபிஸ் இம்யூனோகுளோபுலின்' ஊசி மருந்தின் விலை ஒரு மில்லி லிட்டருக்கு ரூபாய் 119.48 ஆக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பின் போது இதய ரத்தக் கட்டிகளைக் கரைக்கப் பயன்படுத்தப்படும் அதிமுக்கிய 'டெனெக்டெப்லேஸ்' ஊசி மருந்தின் விலை ஒரு வயல் ரூபாய் 60,238.27 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இந்த புதிய உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்களது தயாரிப்புகளின் புதிய அதிகபட்ச சில்லறை விலையை உடனடியாக மருந்துப் பாக்கெட்டுகளின் மீது அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய விலையிலேயே தொடர்ந்து மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் மருந்துகளைச் சார்ந்திருக்க வேண்டிய நடுத்தர மற்றும் விளிம்புநிலை குடும்பங்களின் மாதாந்திர மருத்துவப் பட்ஜெட்டை இந்த விலை குறைப்பு நடவடிக்கை பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
