நாமக்கல் முட்டை விலை உயர்வு... வரலாறு காணாத உச்சத்தை நோக்கி கொள்முதல் விலை!

 
முட்டை முட்டை

ஆசியாவிலேயே முட்டை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட அதிநவீனக் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 4 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுத் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

முட்டை விலை உயர்வு! கல்லா கட்டும் தீபாவளி விற்பனை!

இந்நிலையில், நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முட்டை உற்பத்திச் செலவு, பிற மாநிலங்களின் தேவை மற்றும் சந்தை நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், நேற்றைய நிலவரப்படி 580 காசுகளாக (ரூ.5.80) இருந்த ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை,  5 காசுகள் உயர்த்தப்பட்டு 585 காசுகளாக (ரூ.5.85) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோடைக்காலக் தேவைகள் மற்றும் உற்பத்திச் சமநிலை காரணமாக முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பண்ணைக் கொள்முதல் விலையே 5 ரூபாய் 85 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளதால், வெளிச்சந்தையில் மற்றும் அண்ணாச்சி கடைகளில் ஒரு முட்டையின் சில்லறை விற்பனை விலை 6 ரூபாய் 50 காசுகள் முதல் 7 ரூபாய் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது இல்லத்தரசிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.