எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் திடீர் ஆய்வு!
சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்மார்களுக்கான வசதிகள் மற்றும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் முன்னேற்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ள 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், மோதிரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்புப் பெட்டகங்கள் மற்றும் இதர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் தீவிரமாகப் பார்வையிட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாய்மார்களுக்குத் தேவையான பாலூட்டும் அறை உள்ளிட்ட அடிப்படை மற்றும் அவசியமான வசதிகள் முறையாகச் செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் விநியோகத்திற்காக 19 பிரசவ மையங்கள் 4 மையங்களுடன் இணைக்கப்பட்டிருப்பது குறித்தும், பிரசவப் பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குப்புலட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் தொடர்புடைய மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.
