பெண் தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு மரண தண்டனை ... பெரும் பரபரப்பு!

 
egypt

 

எகிப்து நாட்டைச் சேர்ந்த சாரா கலீபா (வயது 39) என்பவர் அந்நாட்டின் பிரபல செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார். முக்கியமான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி வந்த இவர் மாடல் அழகியாகவும் விளம்பரங்களில் நடித்தும் வந்தார். வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து கொகைன் மற்றும் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் சாரா கலீபாவுக்கும் தொடர்பு இருப்பதாகத் துப்பு கிடைத்ததை அடுத்து அவருடைய வீட்டில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது அவருடைய வீட்டில் 750 கிலோ போதைப்பொருட்கள், வீட்டின் அருகே இரண்டு ஆய்வகங்கள் மற்றும் உரிமம் இல்லாத துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சாரா கலீபா உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சாரா கலீபா உள்பட 12 பேருக்கும் மரண தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் போதைப்பொருள் தயாரிப்பு வழக்கில் சிக்கி மரண தண்டனை பெற்றுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.