அமெரிக்காவின் பென்டகனை விட 8 மடங்கு பிரம்மாண்டம்... எகிப்தில் 'தி ஆக்டகன்' பாதுகாப்பு தலைமையகம் திறப்பு!

 
எகிப்து தி ஆக்டகன்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் 'பென்டகன்' பாதுகாப்புத் தலைமையகத்தை விடப் பரப்பளவில் பல மடங்கு பெரியதான, உலகின் அதிபிரம்மாண்ட ராணுவத் தலைமையக வளாகமான "தி ஆக்டகன்" என்ற மெகா பாதுகாப்பு மையத்தை எகிப்து அரசு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துள்ளது.

எகிப்தின் அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ராணுவ அணிவகுப்பு மற்றும் விமானப் படை விமானங்களின் சாகசங்களுடன் இந்த மாபெரும் பாதுகாப்பு நகரத்தை முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

எகிப்தின் புதிய நிர்வாகத் தலைநகரில் சுமார் 22,000 ஏக்கர் (89 சதுர கிலோமீட்டர்) பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட மண்டலத்திற்குள் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பும், பரப்பளவும் அமெரிக்கப் பென்டகனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன.

அமெரிக்காவின் பென்டகன் தலைமையகம் சுமார் 65 லட்சம் சதுர அடி தரைப்பரப்பைக் கொண்டுள்ள வேளையில், எகிப்தின் புதிய 'தி ஆக்டகன்' வளாகம் 5.05 கோடி சதுர அடி (4.7 மில்லியன் சதுர மீட்டர்) தரைப்பரப்பில் கட்டப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. இது தரைப்பரப்பின் அடிப்படையில் பென்டகனை விட கிட்டத்தட்ட 8 மடங்கு பெரியதாகும்.

எகிப்தியப் படைகளின் வெவ்வேறு பிரிவுகளைக் குறிக்கும் வகையில், எண்கோண வடிவிலான 8 பெரிய வெளிவட்டக் கட்டடங்களும், அவற்றின் நடுவே 2 மையக் கட்டடங்களும் என மொத்தம் 10 முதன்மைக் கட்டட அமைப்புகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ஒரு ராணுவத் தலைமையகமாக இல்லாமல், எகிப்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகத்தை அவசரக் காலங்களில் கட்டுப்படுத்தும் ஒரு 'குட்டி ராணுவ நகரமாகவே' இது செயல்படவுள்ளது. இந்த மெகா வளாகத்திற்குள் எகிப்தின் பாதுகாப்பு அமைச்சகம், முப்படைகளின் தலைமை அலுவலகங்கள், அதிநவீன சைபர் செக்யூரிட்டி  மையம், தேசிய அவசரக்கால மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் என 13 முக்கிய மூலோபாய மற்றும் தளவாட மண்டலங்கள்  ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

எகிப்து நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புப் படைகளையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்க ஏதுவாக, இந்த வளாகம் முழுவதிலும் நவீன C4ISR தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மற்றும் சைபர் போர்க்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இதில் உள்ள பிரம்மாண்ட தரவு மையங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் வரும் கோடிக்கணக்கான தரவுகளை நொடிப் பொழுதில் பகுப்பாய்வு செய்து, அவசரக் காலங்களில் மிக வேகமாகவும் துல்லியமாகவும் முடிவுகளை எடுக்க ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இந்த மையம் வழிவகை செய்யும். எகிப்தின் இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சி, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலையை மாற்றி அமைக்கும் எனச் சர்வதேச ராணுவப் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.