ஏகனாபுரம் சாலைக்கு முதலமைச்சர் விஜய்யின் பெயர் - கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத் திட்டப் பாதிப்பில் இருந்து நிலங்களைக் காப்பாற்றியதற்காக, ஏகனாபுரம் கிராம மக்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துச் சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். ஏகனாபுரம் கிராமத்தின் பிரதான சாலைக்கு முதலமைச்சர் விஜய்யின் பெயரைச் சூட்டுவதற்கு ஊர்மக்கள் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றியுள்ளனர்.
பரந்தூர் பகுதியில் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதிக்கும் வகையில் அமைப்பதாக இருந்த விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டு, மாற்று இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரந்தூர் திட்டத்திற்காக ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 1,100 நாட்களுக்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்ததும் நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பரந்தூரில் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். தங்களின் வாழ்வாதாரத்தையும் நிலங்களையும் காப்பாற்றியதற்காகத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
