வீட்டு உபயோக சிலிண்டர் இ-கே.ஒய்.சி அவகாசம் நீடிப்பு - ஆகஸ்ட் 31 வரை சமர்ப்பிக்கலாம்!

 
சிலிண்டர்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான 'இ-கே.ஒய்.சி' ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்கு மானியச் சிலிண்டர்களைப் பயன்படுத்துவது, ஒரே வீட்டில் பல இணைப்புகள் வைத்திருப்பது மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுப்பதற்காக 'இ-கே.ஒய்.சி' கட்டாயமாக்கப்பட்டது.

சிலிண்டர்

எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில், நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் மட்டுமே சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய நடைமுறையும் அமலில் உள்ளது.

தமிழகத்தில் 85% வாடிக்கையாளர்கள் இ-கே.ஒய்.சி நிறைவு செய்த நிலையில், மீதமுள்ள 15% (சுமார் 50 லட்சம்) வாடிக்கையாளர்கள் பதிவு செய்யாததால் ஆகஸ்ட் 24 முதல் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாத சூழல் உருவானது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர்

வீட்டிற்குச் சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் பணியாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன் செயலி மூலம் பயோமெட்ரிக் / புகைப்படப் பதிவு செய்து தருகின்றனர். எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.

எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள சிறப்புச் செயலியைப் பயன்படுத்தி, வெளிநாட்டிலிருந்தபடியே ஆவணப் பதிவை ஆன்லைனில் எளிதாக நிறைவு செய்யலாம். எனவே, இதுவரை இ-கே.ஒய்.சி நிறைவு செய்யாத வாடிக்கையாளர்கள் வரும் ஆகஸ்ட் 31-க்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.