எல்-நினோ தாக்கத்தால் நீலகிரி வனப்பகுதியில் கடும் வறட்சி - தீவனமின்றி வனவிலங்குகள் அவதி!
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் முதுமலைப் புலிகள் காப்பகப் பகுதிகளில் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வறட்சியால் புற்கள் காய்ந்து கருதியுள்ளதால், வனவிலங்குகளுக்குப் பசுந்தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எல்-நினோ நிகழ்வு காரணமாக நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், நீலகிரி மாவட்டம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. முதுமலைப் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலப் பகுதிகளான மாவனல்லா, மசினகுடி, மாயார், சிரியூர், சிங்காரா மற்றும் வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் உள்ள அனைத்துப் புற்களும் காய்ந்து கருகிக் காட்சியளிப்பதால், காட்டு யானைகள் போன்ற பெரிய வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வேறு இடங்களுக்குப் இடம்பெயரத் தொடங்கியுள்ளன. உணவு மற்றும் நீரின்றி மான்கள் உள்ளிட்ட சிறிய வனவிலங்குகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால், வனத்துறையினர் வெளியில் இருந்து பசுந்தீவனங்களைக் கொண்டு வந்து வழங்கி உதவ வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
