நெகிழ்ச்சி வீடியோ.. ஆர்டெமிஸ்-II வெற்றி; பசிபிக் கடலில் 'கச்சித' லேண்டிங்.. வரலாறு படைத்த நாசா- 53 ஆண்டுகளுக்குப் பின் நிலவைத் தொட்டுத் திரும்பிய வீரர்கள்!

 
ஆர்டெமிஸ்-II விண்வெளி வீரர்கள் ஆர்டெமிஸ்-II விண்வெளி வீரர்கள்

விண்வெளி ஆய்வில் ஒரு புதிய சகாப்தம் இன்று படைக்கப்பட்டுள்ளது. நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்டெமிஸ்-II' (Artemis-II) விண்வெளிப் பயணம், 10 நாட்கள் நிலவைச் சுற்றி வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை பசிபிக் கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இதன் மூலம் 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை அமெரிக்கா மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

பூமியை நோக்கிய பயணத்தின் இறுதிப் பகுதி மிகவும் சவாலானதாக அமைந்தது. ஓரியன் விண்கலம் அதன் சேவைப் பகுதியை கழற்றிவிட்டு, வீரர்கள் அமர்ந்திருந்த பகுதி மட்டும் மணிக்கு 25,000 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. அப்போது காற்றுடன் ஏற்பட்ட உராய்வினால் விண்கலத்தைச் சுற்றி 5,000 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உருவானது.

இந்த அதீத வெப்பத்தினால் விண்கலத்திற்கும் பூமிக்கும் இடையிலான தகவல் தொடர்பு சுமார் 6 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. 'பிளாக்அவுட்' என்று அழைக்கப்படும் இந்த ஆபத்தான நேரத்தைக் கடந்து, விண்கலம் பத்திரமாகத் தரை இறங்கியபோது நாசா விஞ்ஞானிகள் கைதட்டித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க பாராசூட் நுட்பம் மிகத் துல்லியமாகப் பயன்படுத்தப்பட்டது. முதலில் 25,000 அடி உயரத்தில் இரண்டு சிறிய 'ட்ரோக்' பாராசூட்டுகள் விரிந்து வேகத்தைக் குறைத்தன. பின்னர், 6,000 அடி உயரத்தில் மூன்று பிரம்மாண்டமான ஆரஞ்சு நிற 'மெயின்' பாராசூட்டுகள் விரிவடைந்து, விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 20 மைல் என்ற மிகக் குறைந்த அளவிற்கு மாற்றியது.

விண்வெளி

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.37 மணி அளவில், கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையிலிருந்து 60 மைல் தொலைவில் பசிபிக் கடலில் ஓரியன் விண்கலம் 'ஸ்பிளாஷ்டவுன்' முறையில் கச்சிதமாக வந்து விழுந்தது. அங்கு ஏற்கனவே தயாராகக் காத்திருந்த அமெரிக்கக் கடற்படையின் யு.எஸ்.எஸ் ஜான் பி. முர்தா கப்பல் வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் விண்கலத்தை நெருங்கி நான்கு வீரர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.

இந்த வரலாற்றுப் பயணத்தில் பங்கேற்ற விண்கலத்தின் கமாண்டர் ரீட் வைஸ்மேன், நிலவை நோக்கிப் பயணித்த முதல் கறுப்பின வீரர் விக்டர் குளோவர், நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் பெண் கிறிஸ்டினா கோக், கனடா நாட்டின் சார்பில் பங்கேற்ற முதல் விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு பேரும் உலக விண்வெளி வரலாற்றில் தங்களது பெயரைப் பதித்துள்ளனர்.

விண்வெளி

ஏப்ரல் 6-ஆம் தேதி பூமியிலிருந்து சுமார் 2,52,757 மைல்கள் தொலைவைக் கடந்து, மனிதர்கள் விண்வெளியில் பயணித்த மிக நீண்ட தூரம் என்ற உலகச் சாதனையைப் படைத்தனர். பூமியிலிருந்து நாம் எப்போதும் பார்க்க முடியாத நிலவின் பின்புறத்தை இவர்கள் நேரில் கண்டு ஆய்வுகள் செய்தனர். இந்த வெற்றியானது, 2027-ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவில் தரை இறக்கத் திட்டமிடப்பட்டுள்ள 'ஆர்டெமிஸ்-III' மிஷனுக்கு மிகப்பெரிய அஸ்திவாரமாக அமைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி உலகின் சக்திவாய்ந்த எஸ்.எல்.எஸ்  ராக்கெட் மூலம் தொடங்கிய இந்தப் பயணம், இன்று ஒரு முழுமையான வெற்றியைத் தழுவியுள்ளது. விண்வெளி வீரர்கள் நால்வரும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். "மனிதகுலம் மீண்டும் நிலவில் கால் வைப்பதற்கான கதவு இன்று திறக்கப்பட்டுள்ளது" என விண்வெளி ஆர்வலர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.