வெள்ளகோவிலில் கழுத்தை நெரித்து முதியவர் கொலை - கேரளாவைச் சேர்ந்த 4 தொழிலதிபர்கள் உட்பட 6 பேர் கைது - 2 சொகுசு கார்கள் பறிமுதல்!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த 4 தொழிலதிபர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
வெள்ளகோவில் முத்தூர் ரோடு பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தவரும், ஏலச்சீட்டு நடத்தி வந்தவருமான சசிராஜன் (67) என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மக் கும்பல், அவரைத் துண்டால் முகத்தை மூடி கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தது.

ஏலச்சீட்டு மற்றும் நகை அடமானம் பிடித்து வந்த சசிராஜனிடம் நிறைய பணமும் நகையும் இருக்கும் என்று நம்பி, கேரளாவைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் சம்சுதீன் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தக் கொள்ளைச் சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த நண்பர்களான கேரளாவைச் சேர்ந்த பிரகாஷ், சுதீப் சந்திரன், இமானுவேல், சுமேஷ் மற்றும் ஷெரின் ஆகிய 6 பேர் கொண்ட இந்தக் கும்பல் இரண்டு சொகுசு கார்களில் வந்து கொலையை அரங்கேற்றியுள்ளது. கைதானவர்களில் 4 பேர் சொந்தமாகத் தொழில் நிறுவனங்களும் கடைகளும் நடத்தி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலையாளிகளிடமிருந்து ரூ.68 ஆயிரம் ரொக்கம், 3 வெள்ளி நாணயங்கள், தங்கக் கம்மல் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவைக் மத்திய சிறையில் அடைத்தனர்.
