யாசகம் பெற்று வாழ்ந்து வந்த மூதாட்டி உயிரிழப்பு... வீட்டில் ரூ.8.4 லட்சம் ரொக்கம் மீட்பு - சகோதரர்களின் நெகிழ்ச்சி செயல்!

 
யாசகம் பிச்சை

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் யாசகம் பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர், அப்பகுதியில் நீண்ட காலமாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். வயது மூப்பு காரணமாகச் சமீபத்தில் அந்த மூதாட்டி உயிரிழந்தார்.

மூதாட்டியின் மறைவுக்குப் பிறகு அவரது வீட்டைச் சுத்தம் செய்த போது, அங்குச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது, அதற்குள் சிறு சிறு தொகையாகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த ரூ.8.4 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது. கண்டெடுக்கப்பட்ட மொத்தப் பணமும் உயிரிழந்த மூதாட்டியின் சகோதரர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட சகோதரர்களில் ஒருவர் தனக்கான பங்காக ரூ.6 லட்சத்தை எடுத்துக் கொண்டார். மற்றொரு சகோதரர் தனது பங்கான ரூ.2.4 லட்சத்தை அப்பகுதியில் உள்ள மசூதிக்கு நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. யாசகம் எடுத்துச் சேர்த்த பணத்தைச் சகோதரர்கள் நற்செயலுக்குப் பயன்படுத்திய இந்தச் சம்பவம் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.