4 மாநிலங்களுக்கு முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தல் - தேர்தல் ஆணையம் ஆலோசனை!

 
தேர்தல் தேர்தல்

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய நான்கு முக்கிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள்திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக இந்த மாநிலங்களின் சட்டப்பேரவைக் காலம் முடிவடைய இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தலை நடத்த ஆலோசிப்பதற்குப் பின்னால் நிர்வாகக் காரணம் உள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், நாடு தழுவிய அளவிலான 'மக்கள் தொகை கணக்கெடுப்பின்' இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

வாக்காளர் சரிபார்ப்பு தேர்தல் சார் SIR

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மாநிலச் சட்டப்பேரவை தேர்தல்கள் ஆகிய இரண்டுமே பெருமளவிலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்போடு நடத்தப்பட வேண்டிய பிரம்மாண்டமான பணிகள் ஆகும். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்தினால் நாடு முழுவதும் கடுமையான அரசு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும்.

தேர்தல் மற்றும் கணக்கெடுப்புப் பணிகள் ஒன்றுக்கொன்று தடையின்றி நடப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் தேதிகளை முன்னோக்கி நகர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த நான்கு மாநிலங்களுக்கான தேர்தலை இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் அல்லது வரும் 2027 ஜனவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தேர்தல்

ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால், இதற்கான முதற்கட்டத் தயாரிப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.