தமிழகம் முழுவதும் அக்.10-ல் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 
வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாட்டில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பதற்காக வரும் அக்டோபர் 10-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தகுதியுள்ள இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காகத் அக்டோபர் 10-ம் தேதி சனிக்கிழமை மாவட்டங்களில் தேவைக்கேற்ப சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

வாக்காளர் சரிபார்ப்பு தேர்தல் சார் SIR

நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களில் இளம் வாக்காளர்களின் பதிவை அதிகரிக்கும் வகையில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைப் பட்டியலில் சேர்க்க வசதியாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் திறம்படப் பயன்படுத்தப்பட உள்ளன.

சிறப்பு முகாம்

தகுதியுள்ள இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தேவையான ஆவணங்களுடன் இந்த முகாம்களில் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை இணைத்துக்கொள்ளலாம்.