விஜய்யின் பெரம்பூர் பிரச்சாரத்திற்குத் தடை - தேர்தல் ஆணையம் அதிரடி!

 
தவெக விஜய் தவெக விஜய்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் நாளை முதல் தனது அதிரடிப் பிரச்சாரத்தைத் தொடங்கவிருந்த தவெக தலைவர் விஜய்க்கு, பெரம்பூர் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை தரப்பில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, பின்வரும் காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது: பெரம்பூரில் பிரச்சாரத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடம் சுமார் 300 பேர் மட்டுமே கூடக்கூடிய சிறிய பகுதியாகும்.

தவெக விஜய்

விஜய்யைப் பார்ப்பதற்காகக் குறைந்தபட்சம் 3,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு சிறிய இடத்தில் இத்தனை பேர் கூடினால் கூட்ட நெரிசல் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை அறிக்கை அளித்துள்ளது. அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கும் என்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

பெரம்பூர் பகுதியில் பிரச்சாரத்தைத் தவிர்க்காமல், அதிகப்படியான மக்கள் கூடினாலும் பாதுகாப்பு வழங்கக்கூடிய வகையிலான வேறொரு மாற்று இடத்தைத் தேர்வு செய்யுமாறு தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்று இடத்தைத் தேர்வு செய்து மீண்டும் காவல்துறையிடம் முறையாக விண்ணப்பிக்கும் பட்சத்தில், பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக விஜய்

ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மார்ச் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது பெரம்பூர் பிரச்சாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தவெக நிர்வாகிகள் மாற்று இடத்தைத் தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாளை விஜய் தனது பிரச்சாரத்தைத் திட்டமிட்டபடி தொடங்குவாரா அல்லது தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.