தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளை 4 நாட்கள் மூட தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட உள்ளன.
தேர்தல் சமயத்தில் ஏப்ரல் 21, 22 மற்றும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆகிய 3 நாட்களுக்குத் தொடர்ச்சியாக மதுக்கடைகள் இயங்காது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதி அன்று பாதுகாப்பு கருதி மதுக்கடைகள் மூடப்படும்.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாட்களில் மதுபானங்கள் சட்டவிரோதமாகப் பதுக்கப்படுவதைத் தடுக்கவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆயத்தீர்வை ஆணையர் கிர்லோஷ்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்றும், விற்பனை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கத் தயாராகும் மக்கள், இந்த அறிவிப்பால் முன்கூட்டியே திட்டமிட்டு வருகின்றனர்.
