தமிழகத்தில் இதுவரை ரூ.1212 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் அதிரடி!

 
தமிழ்நாடு தேர்தல் தமிழகம் தமிழ்நாடு தேர்தல் தமிழகம்

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய செய்திக்குறிப்பில், இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் ரூ.1212.74 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல், மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை வரையிலான நிலவரப்படி கைப்பற்றப்பட்ட பொருட்களின் விரிவான பட்டியல்:

வ.எண்

பறிமுதல் செய்யப்பட்ட வகை

மதிப்பு (ரூ. கோடிகளில்)

1

ரொக்கப் பணம்

169.85

2

மதுபானங்கள்

2.95

3

போதைப்பொருட்கள்

82.73

4

விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி)

650.87

5

இதர பொருட்கள் மற்றும் இலவசங்கள்

306.34

மொத்தம்

1212.74

பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையில், முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில் சுமார் ரூ. 495 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு எவ்வித இடையூறோ அல்லது அலைக்கழிப்போ இன்றி இந்த விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையம் உறுதி அளித்துள்ளது.

சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் 06.04.2026 அன்று புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்த வாக்காளர்கள்: 5,73,43,291, ஆண் வாக்காளர்கள்: 2,80,30,658, பெண் வாக்காளர்கள்: 2,93,04,905, மூன்றாம் பாலினத்தவர்: 7,728

மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இடங்கள் 'வாக்குச்சாவடிகள் குறித்த கையேடு - 2020' விதிகளின்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யப் பெருமளவிலான பாதுகாப்புப் படையினரும், அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். 234 தொகுதிகளுக்கும் சேர்த்து 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 150 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகைகள் பறிமுதல் சோதனை தேர்தல்

பதட்டமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க 7,014 நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் நேரடியாகப் பொதுப் பார்வையாளருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த 83,875 பணியாளர்கள் மற்றும் 40,427 காவல்துறை அல்லாத பணியாளர்கள் தேர்தல் பணியில் உள்ளனர். கூடுதலாக, மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய 300 கம்பெனி மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படையினர் (CAPF) அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.