சீமான், எடப்பாடி, ஆதவ் அர்ஜுனா வாகனங்களில் திடீர் சோதனை - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

 
எடப்பாடி எடப்பாடி

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தென்காசி மாவட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தென்காசி மாவட்டம் கழுகுமலை அருகே அவரது பிரசார வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற போது, அங்கிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை மறித்தனர்.

சீமான் சோதனை

எடப்பாடி பழனிசாமி பயணித்த பிரசார வாகனம் மற்றும் அவருடன் வந்த பாதுகாப்பு வாகனங்கள் என அனைத்திலும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். தேர்தல் விதிமுறைகளை மீறிப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை உறுதி செய்ய இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில், வாகனங்களில் இருந்து எவ்வித ஆட்சேபனைக்குரிய பொருட்களோ அல்லது கணக்கில் வராத பணமோ சிக்கவில்லை. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தைத் தொடர அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

சோதனை

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் எனப் பாகுபாடின்றி அனைத்துத் தலைவர்களின் வாகனங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இதேபோல் காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்து விட்டு கிளம்புகையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாகனமும் வழிமறிக்கப்பட்டு, சோதனையிடப்பட்டது. சோதனையில் ஏதும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர். அதே போன்று நேற்று வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வாகனமும் வழிமறிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.