தேர்தல் ஜாக்பாட்... அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கு ரூ.10,000 சிறப்பு நிதி வழங்க ஆணை!
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கோடை விடுமுறை காலமான மே மாதத்தில் அவர்களுக்கு நிலவி வந்த வருமானப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ரூ.10,000 உதவித்தொகை வழங்க ஆணைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் மற்றும் கணினி போன்ற பாடங்களைப் பயிற்றுவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்ததன்படி, இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் 11,773 பயிற்றுநர்களுக்கு மாதத் தொகுப்பூதியம் ரூ.12,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (ரூ.2,500 உயர்வு). இந்தச் சம்பள உயர்வு கடந்த ஜனவரி 1, 2026 முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாகப் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குறை இருந்து வந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில், வரும் மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000 சிறப்பு உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் கலை பயிற்றுநர்கள், தோட்டக்கலை மற்றும் கணினிப் பயிற்றுநர்கள் ஆகிய பயிற்றுநர்கள் பலன் பெறுவர்:
தேர்தல் நெருங்கும் வேளையில், அரசு ஊழியர்கள் மற்றும் பகுதிநேரப் பணியாளர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரம் கோரிப் போராடி வரும் இந்த ஆசிரியர்களுக்கு, இந்தச் சம்பள உயர்வு ஒரு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
