தேர்தல் பாதுகாப்புப் பணி - முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் முப்படையைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எனவே, தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள, 65 வயதிற்கு உட்பட்ட முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் (JCO’s) மற்றும் இதர தரவரிசை முன்னாள் படைவீரர்கள் (OR), அந்தந்த மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் தங்களது படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று, உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு, உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
