உச்சக்கட்டப் பரபரப்பு! நாளை வெளியாகிறது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தை ஆளப்போவது யார்?

 
தேர்தல் தேர்தல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்த நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் 'எக்ஸிட் போல்' (Exit Poll) எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை இந்தக் கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தடை காலம் முடிவுக்கு வருவதால், நாளை (ஏப்ரல் 29) மாலை 6 மணிக்கு மேல் பல்வேறு ஊடகங்கள் மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தயாராக உள்ளன.

தமிழகம் தேர்தல்

இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் முதல்முறையாகக் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. குறிப்பாக விஜய்யின் வருகை வாக்குகளைப் பிரிக்குமா அல்லது புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 234 தொகுதிகளிலும் பதிவான 85.1 சதவீத வாக்குகள் யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது நாளை வெளியாகும் இந்தக் கருத்துக்கணிப்புகள் மூலம் ஓரளவுக்குத் தெரியவரும்.

கருத்துக்கணிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகள் வருகிற மே 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை தொண்டர்களும் பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். நாளை மாலை வெளியாகும் முடிவுகள் அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளைக் கணிக்கும் என்பதால், இன்று முதலே கட்சித் தலைமை அலுவலகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கப் போகும் அந்த 'மெகா' முடிவுகளின் முன்னோட்டமாக நாளை மாலை அமையும்.