5 மாநில இடைத்தேர்தல்... 4 இடங்களில் பா.ஜ.க. வெற்றி... பாராமதியில் சுனேத்ரா பவார் அபார சாதனை!

 
சுனோத்ரா சுனோத்ரா

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற அதே வேளையில், 5 மாநிலங்களில் காலியாக இருந்த 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று வெளியான இதன் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுத் தனது பலத்தை நிரூபித்துள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலம் பாராமதி தொகுதியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் சுனேத்ரா பவார் 2,18,930 வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் உம்ரேத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷாத் பார்மர் 85,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் மராட்டியத்தின் ரகுரி தொகுதியில் அக்சய் கர்திலே 1.40 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். திரிபுராவின் தர்மநகர் மற்றும் நாகாலாந்தின் கொரிடாங் ஆகிய தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினர். பீகார் சட்ட மேலவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. மூத்த தலைவர் அரவிந்த் சர்மா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.க.விற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உமேஷ் மேட்டியும், தாவணகெரே தொகுதியில் சமர்த் சாமனூரும் வெற்றி பெற்றனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தல் முடிவுகள், அந்தந்த மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.