வேகமெடுக்கும் தேர்தல் அரசியல்... இன்று கமல் கட்சியுடன் திமுக தொகுதிப் பங்கீடு!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை மின்னல் வேகத்தில் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியுடன் திமுக முக்கியப் பேச்சுவார்த்தையை நடத்துகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துப் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் களம் காணத் தயாராகி வருகிறார். கோவை, சென்னை மற்றும் மதுரை போன்ற நகர்ப்புற பகுதிகளில் தங்களுக்குச் செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதிகளை மநீம குறிவைத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தரப்பில் சுமார் 15 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை திமுகவிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் தற்போது இணைந்துள்ள தேமுதிக எனப் பெரிய கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே, கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைப் பகிர்ந்து அளிப்பதில் திமுக மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. அதிகப்படியான கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் நீதி மய்யம் தனிச் சின்னத்தில் போட்டியிடுமா அல்லது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்பதும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
2021 சட்டமன்றத் தேர்தலில் 140 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், இந்த முறை பலமான கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கிறது. மறுபுறம் அதிமுக கூட்டணியை உறுதி செய்திருந்தாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தொகுதிப் பங்கீட்டைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
