மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் கார்... 3 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

 
எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா மேற்கு பைபாஸ் சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், எலக்ட்ரிக் கார் தடுப்புச்சுவரில் மோதித் தீப்பிடித்து எரிந்ததில் 3 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நம்பூரில் நடைபெற்ற சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு குடும்பத்தினர் எலக்ட்ரிக் காரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சொந்த ஊரை அடைய இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், விஜயவாடா மேற்கு பைபாஸ் சாலையில் கார் எதிர்பாராதவிதமாக வீதியின் ஓரத்திலிருந்த தடுப்புச்சுவரில் மோதி அதன் மீது ஏறி தீப்பிடித்தது.

காரின் மோதல் வேகம் மிகக் கடுமையாக இருந்ததால், காரில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் நுன்னா பத்மசாலி பஜாரைச் சேர்ந்த மதுபானக் கடை உரிமையாளர் கொம்மரெட்டி ராம்தேவ் ரெட்டி (39), அவரது தாயார் கொம்மரெட்டி அருணா (56), ராம்தேவ் ரெட்டியின் 3 வயது மகன் மற்றும் திகுரு விஜயா ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இந்த கோர விபத்தில் ஹைதராபாத் மெஹ்திபட்னத்தைச் சேர்ந்த தியாகுரா அருணா (48) கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்திற்குக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த பெண்ணுக்குத் தேவையான அனைத்து உயர்தர மருத்துவச் சிகிச்சைகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.