ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு... செண்ட்ரல் அரக்கோணம் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மின்சார ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்டிரல் மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜூன் 8 முதல் 20 வரை மின்சார ரயில் போக்குவரத்தில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதனால் தினசரி வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, அரக்கோணத்தில் இருந்து அதிகாலை புறப்பட்டு திருத்தணி செல்லும் ரயில்களும், திருத்தணியில் இருந்து இரவு நேரத்தில் அரக்கோணம் மற்றும் சென்னை மூர் மார்க்கெட் நோக்கி வரும் சில முக்கிய மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடக்கவிருப்பதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி இந்த இக்கட்டான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான ரத்து மட்டுமின்றி, சென்னை கடற்கரை, ஆவடி மற்றும் மூர் மார்க்கெட் நிலையங்களில் இருந்து அரக்கோணம் செல்லும் பல ரயில்கள் திருவாலங்காடு மற்றும் அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் மறுமார்க்கத்தில் அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை மற்றும் மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்களும் அரக்கோணம் மற்றும் திருவாலங்காடு இடையே பகுதிநேரமாக இயக்கப்பட மாட்டாது. இந்த தற்காலிகக் குளறுபடிகளால் ஏற்படும் சிரமங்களுக்குப் பயணிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
