கடற்கரை - தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து!

 
ரயில்

 

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் இரவு நேர மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணியின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பறக்கும் ரயில்

இதன்படி வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை ஐந்து மணி நேரத்திற்கு மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. வாரநாட்களில் இயக்கப்படும் சில குறிப்பிட்ட ரெயில்கள் முழுமையாகவும், சில ரெயில்கள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ரெயில்களின் இயக்க நேரமும் மாற்றியமைக்கப்பட்டு அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வழக்கமான சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில ரெயில்கள் ரத்து செய்யப்படுவதோடு, சில ரெயில்கள் தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி நேரமாக இயக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த இரவு நேர ரெயில் சேவை ரத்து மற்றும் நேர மாற்றத்தால் பயணிகள் அனைவரும் உரிய நேரத்தைக் கவனித்துத் தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.