மின்சாதனம் வெடித்து வீடு தீப்பிடிப்பு... 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரின் லிசாரி கேட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் மின்சாதனம் வெடித்து ஒரு வீட்டில் தீப்பிடித்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த மின்சாதனம் ஒன்று திடீரென தீப்பிடித்து வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தீப்பொறி மளமளவென வீடு முழுவதும் பரவியதால், அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வீட்டில் சிக்கியிருந்த 10-க்கும் மேற்பட்டோரில் 6 பேரை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, தீயில் சிக்கிய ஒரு பெண் மற்றும் ஐந்து குழந்தைகள் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மீரட் மாவட்ட மாஜிஸ்திரேட் விஜய் குமார் சிங் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் பாண்டே ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். "மின் கசிவு அல்லது மின்சாதனக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் தீ விபத்தில் பலியான சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
