தவெகவினர் மீது மின்வாரிய பொறியாளர் காவல்துறையில் புகார்!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடை விவகாரத்தில், மின்சாரத்துறை அதிகாரியின் வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்ததாகத் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மீது காவல்துறைக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதியுற்ற அப்பகுதியைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் மற்றும் சிலர், மின்சாரத்தை உடனடியாகச் சீரமைக்கக் கோரி அங்குள்ள மின்சாரத்துறை உதவி பொறியாளர் தினேஷ் என்பவரின் இல்லத்தை நோக்கி நள்ளிரவிலேயே சென்றுள்ளனர்.
உதவி பொறியாளர் தினேஷின் வீட்டிற்குச் சென்ற கும்பல், நள்ளிரவு என்றும் பாராமல் அவரது வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. தினேஷ் பணி நிமித்தமாக வெளியே இருந்த சூழலில், வீட்டில் இருந்த அவரது மனைவி மங்கையர்கரசி மற்றும் குடும்பத்தினர் நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தத்தைக் கேட்டுப் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

கதவைத் திறக்கச் சொல்லி நீண்ட நேரம் கூச்சலிட்ட அந்த அடையாளம் தெரியாத நபர்கள், மின்சார வாரிய அதிகாரிகளுக்கு எதிராக அநாகரிகமான முறையில் மிரட்டல்களையும் விடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த அத்துமீறல் சம்பவத்தால் நிலைகுலந்து போன உதவி பொறியாளர் தினேஷின் மனைவி மங்கையர்கரசி, உடனடியாகத் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தனது புகாரில், "நள்ளிரவில் வீட்டுக் கதவைத் தட்டித் தனக்கும், தன் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்திய அடையாளம் தெரியாத தவெகவினர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டம் ஒழுங்கு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மிரட்டல் புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நள்ளிரவில் அராஜகத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் நோக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளின் வீடுகளுக்கே சென்று அரசியல் கட்சியினர் இவ்வாறு மிரட்டல் விடுக்கும் போக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
