"ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 அல்ல.. ரூ.32.47தான்" - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
மழை காரணமாக மாநிலத்தில் மின் தேவை குறைந்துள்ளதால், வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தமிழகத்தில் தற்போது பெய்துவரும் மழை மற்றும் மின் விநியோகம் குறித்த நிலவரங்களை விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், "மாநிலத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மின்சாரத்தின் தேவை சுமார் 1,000 மெகாவாட் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது நேற்றிலிருந்து கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.

வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், டெண்டர் முறைப்படி ஒரு யூனிட் ரூ.32.47-க்கு மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது. விலையை இன்னும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உச்சபட்ச தேவை நிலவும் நேரங்களுக்கு மட்டுமே வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கத் டெண்டர் கோரப்பட்டுள்ளது; மின் தேவை குறைந்தால் அந்த டெண்டர்களும் நிறுத்தப்படும்" என்று தெளிவுபடுத்தினார். தூத்துக்குடி அனல் மின் நிலையம் போர்க்கால அடிப்படையில் முழுமையாகச் சீரமைக்கப்படும்.

புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதிகளிலும் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றாலும், நீர்நிலைப் புறம்போக்குகளில் வசிப்போருக்கு மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
