14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாப பலி... பெரும் சோகம்!
திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள குளத்தூர் செல்லப்பிள்ளை கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சற்குணம். இவரது 14 வயது மகன் சந்தோஷ்குமார். இவர்களது வீட்டில் திடீரென மின்தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த யாரிடமும் சொல்லாமல் சந்தோஷ்குமார் தன்னிச்சையாக மின் பழுதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் சந்தோஷ்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சிறுவனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த எதிர்பாராத விபத்து குறித்து தாடிக்கொம்பு காவல் துறையினர் முறைப்படி வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
