ஊரை விட்டு போயும், 14 ஆண்டுகள் கடந்தும் விடல... ஒரே குடும்பத்தில் 4 பேரை கொன்ற காட்டு யானை!

 
யானை

நேபாள நாட்டில் சிட்வான் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள மாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சனிச்சரா போட்டே என்பவரின் குடும்பத்தை, 'துர்பே' என்ற ஒற்றை முரட்டு காட்டு யானை  குறிவைத்துத் தாக்கி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டில் இந்த யானையின் கோரத் தாக்குதலில் சனிச்சரா போட்டேவின் பெற்றோர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் தங்களின் உயிரை இழந்தனர். இதனால் பயந்துபோன அவர், யானையிடமிருந்து தப்பிக்க ராப்தி ஆற்றைக் கடந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜகத்பூர் கிராமத்திற்குத் தனது குடும்பத்துடன்   குடிபெயர்ந்தார்.

பெரிய ஆற்றைக் கடந்து அந்த யானை தங்களை நோக்கி வரப்போவதில்லை என்ற  நம்பிக்கையில் சனிச்சரா போட்டேவின் குடும்பத்தினர் அங்கு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 14 ஆண்டுகள் கழித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தத் துர்பே யானை ஜகத்பூர் கிராமத்திற்குள்  நுழைந்துள்ளது. நள்ளிரவில் நயவஞ்சகமாக அவர்கள் தங்கியிருந்த வீட்டைத் தேடிக் கண்டுபிடித்த அந்த முரட்டு யானை, வீட்டின் மண் சுவர்களை இடித்துத் தள்ளி  ஆவேசத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளது.

Elephant kills four members of same Nepal family in 14 years - India Today

இந்தத் திடீர் தாக்குதலின் போது வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிய சனிச்சரா போட்டேவின் மருமகள் ஆஷிகா போட் (25 வயது) மற்றும் 4 வயது பேரன் பரத் ஆகிய இருவரையும் அந்த யானை மிதித்துக் கொன்று பழிதீர்த்துக் கொண்டது. இவ்வளவு பெரிய ஆற்றைக் கடந்து இவ்வளவு தூரம் வந்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை 14 ஆண்டுகளில் இந்த யானை கொன்று குவித்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த யானையின் விசித்திரமான பழிவாங்கும் குணம் குறித்து நேபாள நாட்டு மக்கள் தற்பொழுது வியப்புடன் பேசி வருகின்றனர்.