புலிகள் சரணாலயத்தில் ஆண் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு!

 
குட்டி யானை குட்டி யானை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் இன்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாயார் நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலை சந்திப்பு அருகே சுமார் 4 வயது மதிக்கத்தக்க இளம் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறை கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் உயிரிழந்த யானைக்கு இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த யானை ஏதேனும் தொற்று நோய் காரணமாக உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் இயற்கை காரணங்களா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே யானையின் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கியமாக இருக்க வேண்டிய இளம் வயது யானை திடீரென உயிரிழந்திருப்பது வன ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வெப்பம் அல்லது நீர் பற்றாக்குறை காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த யானையின் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.