பள்ளிக்குச் சென்றபோது காட்டு யானை மிதித்து தாய் பரிதாப பலி, மகன் கவலைக்கிடம்...!

 
வயநாடு முட்டிகொம்பன் யானை வயநாடு முட்டிகொம்பன் யானை

கேரள மாநிலம் சூரியநெல்லி திருவள்ளூவர் மலை அருகே உள்ள சிங்குக்கண்டம் பகுதியைச் சேர்ந்த வெள்ளசாமியின் மகள் மாரி (36). இவர் நேற்று முன்தினம் காலை தனது மகனை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அப்பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாகப் பாதையே தெரியாத அளவுக்கு இருள் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.

தனது மகனைப் பள்ளியில் விட வேண்டும் என்ற அவசரத்தில் மாரி சிங்குக்கண்டம் வளைவுப் பகுதியை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அடர்ந்த மூடுபனி காரணமாக அங்கு காட்டு யானை ஒன்று நிற்பதை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த காட்டு யானை அவர்கள் இருவரையும் திடீரென வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலில் யானையின் காலில் மிதிபட்ட மாரி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மாரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.