காட்டு யானை மிதித்து விவசாயி பலி... காவலுக்கு சென்ற போது சோகம்!

 
யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அருகே உள்ள ஜீராஹள்ளி வனப்பகுதி காமையன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பசுவ செட்டி (வயது 62). இவர் தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் காய்கறிப் பயிர்களைக் காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகச் சனிக்கிழமை இரவு காவலுக்குச் சென்றிருந்தார். அங்கு நள்ளிரவில் திடீரென நுழைந்த ராட்சதக் காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அந்த யானை அவரைத் தாக்கி மிதித்துள்ளது.

டாஸ் ஸ்லிப் யானை

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த விவசாயி பசுவ செட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதுடன், இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

யானை

தாளவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். விளைநிலங்களுக்குள் புகுந்து சேதாரம் ஏற்படுத்தும் வனவிலங்குகளைத் தடுத்து நிறுத்த உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.