சர்வதேச யானைகள் தினம்... ரயில் மோதி 2 யானைகள் பலி... பெரும் சோகம்!
கேரள மாநிலம் வாளையாறு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. உலக யானைகள் தினமான நேற்று நள்ளிரவில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளம் எல்லையையொட்டி அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தின் வாளையார் பகுதியில் நான்கு யானைகள் கொண்ட கூட்டம் நள்ளிரவில் ரயில் பாதையைக் கடக்க முயன்றபோது இத்துயரம் நிகழ்ந்துள்ளது.

அப்போது அவ்வழியாக வந்த மங்களூரு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் எதிர்பாராதவிதமாக யானைகள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் ரயில் மோதிய வேகத்தில் தாய் மற்றும் குட்டி யானை இரண்டும் தண்டவாளத்தில் சுமார் ஐம்பது மீட்டர் தூரத்திற்கு உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. ரயில் மோதி இரண்டு யானைகளும் உடல் நசுங்கி கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, வாளையாறு வனத்துறையினர் மற்றும் பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு வனப்பகுதிக்குள் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதால் அங்கு இது போன்ற விபத்துகள் தவிர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். ஆனால் அண்டை மாநிலமான கேரளப் பகுதியில் இதுபோன்ற பாதுகாப்பு முறைகள் இல்லாததால் யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும் வனவிலங்கு ஆர்வலர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
