ChatGPT-யிடம் தற்கொலைக்கு வழி கேட்கும் மாணவிகள் - எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்!
தற்கொலை குறித்த விபரங்களைச் சேகரிக்க ஒரு செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் பயன்படுத்திய இரண்டு கல்லூரி மாணவிகள் உயிரிழந்த சம்பவம், உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 7ம் தேதி குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள ஒரு சுவாமிநாராயண் கோயில் கழிவறையில் 18 மற்றும் 20 வயதுடைய இரண்டு தோழிகள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களது சடலங்களுக்கு அருகில் மயக்க மருந்து ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகள் இருந்தன. போலீஸார் அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது, அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான வழிகள் குறித்து சாட் ஜிபிடி தளத்தில் தொடர்ந்து தேடியது தெரியவந்தது. "எப்படித் தற்கொலை செய்வது?", "எந்த மருந்துகளைப் பயன்படுத்தலாம்?" போன்ற கேள்விகளை அவர்கள் கேட்டுள்ளனர்.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த கேட்டி மில்லர் என்ற பிரபலப் போட்காஸ்ட் தொகுப்பாளர், "இந்தியாவில் இரண்டு பெண்கள் ChatGPT-யிடம் தற்கொலைக்கு வழி கேட்டு உயிரிழந்துள்ளனர். உங்கள் அன்புக்குரியவர்களை இதுபோன்ற AI தளங்களைப் பயன்படுத்த விடாதீர்கள்" என எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், மிகவும் சுருக்கமாக "Yikes" (அதிர்ச்சி) என்ற ஒற்றைச் சொல்லைப் பதிவிட்டுத் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Open AI நிறுவனத்திற்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ChatGPT-யின் பாதுகாப்பு அம்சங்களைக் கேள்வி எழுப்பும் விதமாக மஸ்க்கின் இந்த பதில் பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் மனிதர்களைப் போலவே பேசுவதால், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அவற்றிடம் தீர்வு தேடும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அவை உணர்வுகளற்றவை என்பதால் ஆபத்தான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்கொலை அல்லது சுய காயங்கள் தொடர்பான கேள்விகளுக்குத் தங்களது AI பதிலளிக்கக் கூடாது என்ற பாதுகாப்பு விதிகள் இருப்பதாகவும், நீண்ட உரையாடல்களின் போது இந்தப் பாதுகாப்பு கவசங்கள் சில நேரங்களில் செயலற்றுப் போக வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவம் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
உங்களுக்கு மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், தயவுசெய்து தகுதியான மனநல மருத்துவர்களையோ அல்லது தற்கொலை தடுப்பு மையங்களையோ அணுகுங்கள். உதவிக்கு: சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050.
