அவசர உதவி எண்கள் அறிவிப்பு... தாமிரபரணியில் வெள்ள அபாயம்... கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் எச்சரிக்கை!
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டத்திலும் மற்றும் அதன் நீர்பிடிப்புப் பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று முதல் நாளை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராம மக்கள் மற்றும் கோரம்பள்ளம் ஆறு, அணைக்கட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பிற மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் உரிய பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மருதூர், ஸ்ரீவைகுண்டம், கோரம்பள்ளம் அணைக்கட்டுகள், உப்பாறு மற்றும் உப்பாத்து ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் துறை சார்ந்த அலுவலர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வெள்ளப் பாதிப்புகள் அல்லது அவசர உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையின் 1077 (கட்டணமில்லா எண்) அல்லது 7092300044 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
