நெகிழ்ச்சி... சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர் கார் மோதி பலி... உயிரிழந்த நண்பரின் சடலத்திற்கு மழையில் குடை பிடித்த முதியவர்!

 
முதியவர் பலி

செங்கல்பட்டில் சாலையோரம் படுத்திருந்த முதியவர் மீது கார் ஏறி இறங்கிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மழையில் நனைந்தபடி கிடந்த நண்பரின் உடலுக்கு மற்றொரு முதியவர் கண்ணீருடன் குடை பிடித்தக் காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.

செங்கல்பட்டு பகுதியில் சாலையோரமாகக் குமார் என்ற முதியவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அருகிலிருந்த தனியார் திருமண மண்டபத்திலிருந்து பின்னோக்கி வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாகக் குமார் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த ஆணும் பெண்ணும் கீழே இறங்கியபோது, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர்கள் எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி அலட்சியமாகப் பதிலளித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த சமயத்தில் அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. விபத்து குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர நீண்ட நேரமானது. இதனால் உயிரிழந்த தனது நண்பன் குமாரின் உடல் கொட்டும் மழையில் நனைவதைப் பொறுக்க முடியாமல், மற்றொரு முதியவர் கண்ணீர் மல்க குடை பிடித்தபடியே சடலத்தின் அருகில் அமர்ந்திருந்தார். இந்த உருக்கமான காட்சி காண்போரின் நெஞ்சைக் கனக்கச் செய்தது.

இச்சம்பவம் குறித்துத் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியமாகச் சென்ற காரின் எண் மற்றும் அதில் வந்தவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.