நெகிழ்ச்சி... இன்ஸ்டா பிரபலம் வீரமணிக்கு பல லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை அள்ளிக் கொடுத்த இன்ஸ்டாமார்ட் நிறுவனம்!

 
வீரமணி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் பாக்ஸ் கேட்ட மதுரை இன்ஸ்டா பிரபலம் வீரமணிக்கு, நெட்டிசன்கள் கேஷ் ஆன் டெலிவரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அனுப்பி அதிர்ச்சி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்டாமார்ட் நிறுவனம் அவருக்குப் பரிசுகளை அள்ளிக் கொடுத்துள்ளது.

இன்ஸ்டா

மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வீரமணி, சமூக வலைத்தளத்தில் தீபாவளிக்குத் தமக்கு முகவரியைப் பகிர்ந்தால் ஸ்வீட் பாக்ஸ் அனுப்பிவைப்பதாகத் தெரிவித்துத் தனது முகவரியைப் பகிர, அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நெட்டிசன்கள் எழுபது கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்களை 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் பெரும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த வீரமணியின் காணொளி இணையத்தில் வைரலானது.

இன்ஸ்டா வீரமணி

இந்நிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்விகி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் வீரமணிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிறப்புப் பரிசுகளை வழங்கியுள்ளது. அதன்படி, செல்போன், மடிக்கணினி, புரொஜெக்டர், இண்டக்‌ஷன் குக்கர் உள்ளிட்ட சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை அந்நிறுவனம் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கி அசத்தியுள்ளது.