65,786 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.58,214 கோடி முதலீடு... ஒரே நாளில் 78 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

 
தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்பந்தம்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் வளாகத்தில் இன்று 2வது வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மற்றும் மாற்று மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மட்டும் 78 நிறுவனங்களுடன் ரூ.58,214 கோடி மதிப்பிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 65,786 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற கடந்த 200 நாட்களில், இதுவரை மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டு, 1,98,557 வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2026 முதல் கையெழுத்தான 112 ஒப்பந்தங்களில் 83 திட்டங்கள் ஏற்கனவே நில ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு நிலைக்கு மாறியுள்ளன.

லண்டன் விஜய் முதலீடு

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதோடு, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ரூ.7,925 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு (19,965 வேலைவாய்ப்புகள்) முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.1,430 கோடி மதிப்பில் பணிகள் நிறைவடைந்த 6 தொழில் திட்டங்களை (1,710 வேலைவாய்ப்புகள்) தொடங்கி வைத்ததோடு, 5 நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட 18 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜே. முகமது பர்வாஸ் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “தமிழகத்தின் உண்மையான போட்டி மற்ற மாநிலங்களுடன் அல்ல; உலகின் முன்னணி உற்பத்திப் பொருளாதாரங்களுடன் தான்” எனக் குறிப்பிட்டார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் விழுப்புரம், கடலூர், இராமநாதபுரம், வேலூர், கரூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ரூ.8,140 கோடி முதலீடு மற்றும் 2,000 வேலைவாய்ப்புகள். ஜே.எம். பாக்ஸி போர்ட்ஸ் & லாஜிஸ்டிக்ஸ் சரக்குப் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் பல மாவட்டங்களில் ரூ.5,200 கோடி முதலீடு மற்றும் 7,500 வேலைவாய்ப்புகள். அவிக்னா பிரைவேட் லிமிடெட் கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு மற்றும் சென்னை பகுதிகளில் தொழில் பூங்கா அமைக்க ரூ.5,000 கோடி முதலீடு மற்றும் 300 வேலைவாய்ப்புகள்.

தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினர்

கிரீன்பேஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பார்க்  செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழில் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைக்க ரூ.2,650 கோடி முதலீடு மற்றும் 200 வேலைவாய்ப்புகள்.

சன்மார் குழுமம் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் துறை சார்ந்த திட்டத்திற்காக ரூ.1,950 கோடி முதலீடு மற்றும் 950 வேலைவாய்ப்புகள். இவை தவிர, டி.வி.எஸ். மோட்டார் மற்றும் டபிள்யூ.இ.ஜி. ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.2,000 கோடி முதலீட்டிற்கும், டைட்டன் நிறுவனம் ரூ.1,500 கோடி முதலீட்டிற்கும், கே.பி.ஆர். மில் நிறுவனம் ரூ.775 கோடி முதலீட்டிற்கும் ஒப்பந்தம் செய்துள்ளன. நோக்கியா, ராயல் என்ஃபீல்டு மற்றும் இமாமி அக்ரோடெக் உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

கிருஷ்ணகிரி முதல் தூத்துக்குடி வரையிலும், கோயம்புத்தூர் முதல் இராமநாதபுரம் வரையிலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சியைப் பரவலாக்கும் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் உற்பத்தித் திறனும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் பலமடங்கு உயரும் எனத் தொழில் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.