பெண்களுக்கு வேலைவாய்ப்பு... தமிழக அரசின் புதிய 'WQEP' செயல்திட்டம்!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யவும், வளர்ந்து வரும் நவீன தொழில் துறைகளில் அவர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 'மகளிர் தரமான வேலைவாய்ப்புத் திட்டம்' (Women's Quality Employment Plan - WQEP) என்ற புதிய பிரத்யேக செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்க முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் பெண்களின் வேலைவாய்ப்புப் பங்களிப்பை கணிசமாக அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த 'WQEP' செயல்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது மூன்று முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும்.

பெண்கள் வேலைவாய்ப்பு ஊதியம் வளர்ச்சி

வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத் துறைகள் மற்றும் நவீனத் தொழில்களில் பெண்களுக்கு உயர் ஊதியத்துடனான வேலைகளைப் பெற்றுத் தருதல். பெண்கள் தடையின்றி வேலைக்குச் செல்வதை உறுதி செய்யப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களைப் பராமரிப்பதற்கான முறையான காப்பக அமைப்புகளை மேம்படுத்துதல். கொள்கை முடிவுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலமாகப் பெண்களுக்கான ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துதல்.

பெண்கள் வேலைக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தற்போதைய வேலைவாய்ப்பு இடைவெளிகளை துல்லியமாகக் கண்டறிய மாநிலம் முழுவதும் விரிவான கள ஆய்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மாவட்ட வாரியாக எந்தெந்தத் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்க முடியும் என்பது குறித்தும், தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் விரிவான செயல்திட்ட கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக பெண்கள்

இதற்கான விரிவான ஆய்வு அறிக்கையை 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கத் தகுதியான எம்பேனல் செய்யப்பட்ட ஆலோசனை நிறுவனத்தைத் தேர்வு செய்யத் தற்போது தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது. முதற்கட்டமாக, மாநில அளவில் ஒரு பொதுவான வழிகாட்டுதல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, பின்னர் வருகின்ற 2029-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் 20 முக்கிய மாவட்டங்களில் இந்த 'மாவட்ட மகளிர் தரமான வேலைவாய்ப்புத் திட்டம்' படிப்படியாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் இந்தத் திட்டம், தமிழ்நாட்டின் பெண்களை உழைப்பாளர் சந்தையில் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.