காலியாகும் கூடாரம்... கண்டுக்கொள்ளாத எடப்பாடி - அதிமுகவிலிருந்து சிங்கை ராமச்சந்திரன் விலகுவதாக அறிவிப்பு!
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) மாணவர் அணி மாநிலச் செயலாளரான சிங்கை ராமச்சந்திரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்படத் தான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்குச் சிங்கை ராமச்சந்திரன் எழுதியுள்ள விலகல் கடிதத்தில், தனது அரசியல் பயணம் மற்றும் விலகலுக்கான காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்: 1987-ல் தனது பெற்றோரின் திருமணத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நேரில் கலந்து கொண்டதையும், தனக்கு ஜி. ராமச்சந்திரன் எனப் பெயர் சூட்டியவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

IIM அகமதாபாத்தில் படித்து முடித்த பிறகு, நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை நிராகரித்து விட்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் கட்சிப் பணியாற்ற வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஐடி பிரிவு மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர், மாணவர் அணிச் செயலாளர் எனப் பல பொறுப்புகளை வகித்ததோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவைத் தொகுதியின் வேட்பாளராகக் கட்சி அளித்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்தியதாக நினைவுகூர்ந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகக் கட்சிக்குள் நடந்த சில நிகழ்வுகள் தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்: "என் கருத்துகளையும் கவலைகளையும் கட்சித் தலைமையிடம் முழு நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பகிர்ந்தேன். ஆனால், என் மனசாட்சியுடன் சமரசம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது, இந்த முடிவைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விலக முடிவு செய்தேன். என்மீது நம்பிக்கை வைத்து பல்வேறு வாய்ப்புகளை வழங்கிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்"
என்று தெரிவித்துள்ளார்.
