தமிழகத்தில் என்கவுண்டர்... பாமக நிர்வாகி படுகொலை குற்றவாளி தப்பிய போது துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாமக நிர்வாகியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகியான ஞானவேல் என்பவரை, பூவரசன் என்ற நபர் நேற்று நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்தார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த பூவரசனை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூவரசனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை மீட்கும் பொருட்டு, பூவரசனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு இன்று அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் கைப்பற்ற முயன்ற பூவரசன், எதிர்பாராதவிதமாகத் தன்னைப் பாதுகாத்து அழைத்துச் சென்ற காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளான்.

காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி பூவரசன் தொடர்ந்து தப்பியோட முயன்றதால், தற்காப்பு நடவடிக்கைக்காகக் காவல்துறையினர் அவனது முழங்காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த குற்றவாளி பூவரசன், உடனடியாக மீட்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளியைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த இச்சம்பவம் வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
