"என்கவுன்டர் தான் இதுக்குத் தீர்வு".. சட்டமன்றத்தில் தெறிக்கவிட்ட பிரேமலதா!

 
பிரேமலதா

தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாகப் பேசியுள்ளார்.

இளைஞர்களைக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் இருந்து மீட்டு, அவர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கே போதைப்பொருள்கள்தான் பிரதான காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 'என்கவுன்டர்' தண்டனை மட்டுமே தீர்வாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

பிரேமலதா

சட்டம் ஒழுங்கு ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

விருத்தாசலம் - வயலூர் மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அங்குச் சீரான சாலையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். பராமரிப்பின்றி வெடிப்பு விட்டுக் காணப்படும் மேம்பாலங்களைச் சீரமைக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தைக் கலைத்து விட்டு அரசே நேரடியாகப் பணிகளைக் கவனிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.