துப்பாக்கிச் சூட்டில் ரவுடி பலி... திருச்செந்தூர் அருகே போலீஸ் அதிரடி என்கவுண்டர்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மரிய அந்தோணி ஆக்னல், போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனக்கண்விளை பகுதியில் பதுங்கியிருந்த அவரைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசார், ரவுடியைச் சரணடையுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், போலீசாரைக் கண்டதும் ஆத்திரமடைந்த ரவுடி மரிய அந்தோணி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென உதவி ஆய்வாளரை நோக்கிச் சுட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார்.

ரவுடி நடத்திய இந்தத் திடீர் தாக்குதலில் உதவி ஆய்வாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், தனது தற்காப்பிற்காக எஸ்.ஐ. ராஜபிரபு ரவுடியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மரிய அந்தோணி ஆக்னலை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், தடயங்களையும் சேகரித்துள்ளனர். ரவுடியின் உயிரிழப்பு குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை திருச்செந்தூர் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
