தொடர் விடுமுறை நிறைவு.. சென்னையில் குவியும் மக்கள்.. தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல்!
ஆகஸ்ட் 14ம் தேதி ஆடிப் பூரம், சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டித் தொடர் விடுமுறையை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள், விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 17) சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் நகரின் முக்கிய நுழைவாயில் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்து நிற்பதால், பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்கின்றன.

ஜி.எஸ்.டி சாலையில் பெருங்களத்தூர், தாம்பரம் மற்றும் வண்டலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சென்னை நகருக்குள் நுழையும் முக்கியப் பேருந்து முனையப் பகுதிகளான கோயம்பேடு மற்றும் மாதவரம் சுங்கச்சாவடி அருகிலும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நகருக்குள் வாகனங்கள் தடையின்றிச் செல்லப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றிச் செல்லுமாறும், சாத்தியமான மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
