'DMK Files' வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி.. நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு, அண்ணாமலை பரஸ்பரம் வாபஸ்!
தமிழக அரசியல் அரங்கில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த ஒரு முக்கிய சட்டப் போராட்டத்திற்கு சுமுகமான முறையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு மற்றும் 'WE THE LEADERS' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பரஸ்பரம் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்குகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

கடந்த 2023-ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை 'DMK Files' என்ற பெயரில் திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுத் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டதாகக் கூறி டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அதேபோல அண்ணாமலை தரப்பிலும் டி.ஆர்.பாலுவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கின் விசாரணை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது அண்ணாமலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, திமுக எம்பி டி.ஆர்.பாலுவிடம் நேரடியாகக் கடுமையான குறுக்கு விசாரணையை நடத்தியிருந்தார்.
இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது தரப்பு நியாயங்களை அசாத்திய வாதங்களாக நீதிமன்றத்தில் முன்வைத்து வந்ததால், இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்தைச் சுமுகமாக முடிக்க முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது அவதூறு வழக்குகளை முறைப்படி திரும்பப் பெறுவதாகத் மனுத் தாக்கல் செய்தனர்.
வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக இருந்த இந்த அவதூறு வழக்குகள், இருதலைவர்களின் சமரசத்தால் சுமுகமாக நிறைவடைந்துள்ளது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
