அமலாக்கத் துறை வளையத்தில் அனில் அம்பானி - ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, சுமார் ரூ.40,000 கோடி மதிப்பிலான வங்கி மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), அனில் அம்பானி மற்றும் அவரது குழும நிறுவனங்களுக்கு எதிராகத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை 10:30 மணியளவில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வந்த அனில் அம்பானியிடம், இரவு 8:20 மணி வரை சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாக (பிப். 25), அனில் அம்பானிக்குச் சொந்தமான மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள 'அபோட்' என்ற 17 அடுக்குமாடி சொகுசு இல்லத்தை அமலாக்கத் துறை முடக்கியது. இதன் மதிப்பு சுமார் 3,716 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் பெற்ற கடன்களைத் தவறாகப் பயன்படுத்தியது, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்தது மற்றும் 'யெஸ்' வங்கியுடனான கொடுக்கல் வாங்கலில் முறைகேடு செய்தது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

இன்றும் வேறொரு வழக்கில் விசாரணைக்காக ஆஜராகுமாறு அனில் அம்பானிக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய விசாரணையில் அவர் ஆஜராகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.15,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
தனது மீதான விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும், நீதிமன்றத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளுக்குச் செல்ல மாட்டேன் என்றும் அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.
