எண்ணூர் குடியிருப்பில் அதிகாலை திடீர் தீ விபத்து… கரும்புகையால் அலறிய மக்கள்!

 
எண்ணூர்

 

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் உள்ள மின்சாரப் பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீ மற்றும் கரும்புகை காரணமாக அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் அவசரமாக வெளியேறினர்.

எண்ணூர் சுனாமி குடியிருப்பின் 5-வது பிளாக்கில் நேற்று (நவம்பர் 5) அதிகாலை சுமார் 5 மணியளவில் மின்சாரப் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக குடியிருப்புவாசிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

மின்சாரப் பெட்டியில் இருந்து தீ பரவியதையும், கரும்புகை வெளியேறியதையும் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி கட்டிடத்தை விட்டு வெளியேறினர். சிலர் கீழே இறங்க முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த எண்ணூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கட்டிடத்துக்குள் சிக்கியிருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது