பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் நிறுவன குடியிருப்புக்கான சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பிரிகேட் நிறுவனம் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டுவதற்காக வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கட்டுமானப் பணிகளுக்கான தடை நீங்கிய சில மணி நேரங்களிலேயே வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நில 'ராம்சார்' (Ramsar Site) எல்லைக்குள், 'பிரிகேட் மார்கன்' என்ற பெயரில் இந்த மெகா குடியிருப்புத் திட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் ரூ. 2,000 கோடி மதிப்பீட்டில், 1,250 வீடுகளைக் கொண்ட பல அடுக்குக் குடியிருப்பு வளாகத்தைக் கட்டுவதற்குப் பிரிகேட் நிறுவனம் பணிகளைத் தொடங்கியிருந்தது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்இந்த அனுமதியை ரத்து செய்ததற்கான முதன்மைக் காரணியாகப் பின்வரும் விதிமீறல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. "சர்வதேச அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப் பகுதி அல்லது அதன் எல்லைக்குள் இத்தகைய பிரம்மாண்ட கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது, மாநில ஈரநில ஆணையத்திடமிருந்து முறையான தடையில்லாச் சான்றிதழ் மற்றும் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், பிரிகேட் நிறுவனம் இந்த முக்கிய அனுமதியைப் பெறத் தவறியதால், அதற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது."
The Tamil Nadu State Environment Impact Assessment Authority has revoked the environmental clearance granted to Brigade Enterprises in January 2025 for construction of high rise residential towers near the Pallikaranai marshland, a designated Ramsar wetland site. The… pic.twitter.com/Y2TKQDlnnz
— Mohamed Imranullah S (@imranhindu) June 18, 2026
முன்னதாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானங்களுக்குச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும், சதுப்பு நிலத்தைச் சுற்றி 1 கிலோ மீட்டருக்கு எவ்வித கட்டுமானமும் செய்யக் கூடாது என வலியுறுத்தியும் அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளால் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இன்று (ஜூன் 18, 2026) இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கட்டுமான நிறுவனம் தரப்பில், "குறிப்பிட்ட இடம் சதுப்பு நிலம் அல்ல, அது பட்டா நிலம். சட்டப்பூர்வமாகவே அனுமதி பெறப்பட்டது" என வாதிடப்பட்டது. சதுப்பு நிலப் பாதுகாப்பு தொடர்பான பிரதான வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனுதாரர்கள் அங்கு அணுகலாம் எனக் கூறி வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கட்டுமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீங்கி, நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், ஈரநில ஆணைய அனுமதி இல்லாத காரணத்தை முன்வைத்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அதன் அனுமதியை ரத்து செய்திருப்பது பிரிகேட் நிறுவனத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
