சேற்றில் சிக்கித் தவித்த பெண் யானை! பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்பு... வைரல் வீடியோ!

 
யானை

 

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் சேற்றில் சிக்கித் தவித்த பெண் காட்டு யானையை, வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். நீண்ட நேரம் சேற்றில் சிக்கியதால் சோர்வடைந்த யானைக்கு கால்நடை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தண்ணீர் குடிக்க வந்தபோது நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாகக் குறைந்துள்ளது. இதனால் அணையின் சில பகுதிகளில் சேறும் சகதியும் காணப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தண்ணீர் குடிப்பதற்காக அணைப் பகுதிக்கு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை, ஆழமான சேற்றில் சிக்கிக்கொண்டது. வெளியேற முடியாமல் இரவு முழுவதும் தவித்த யானையின் பிளிறல் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சேற்றில் யானை

மீட்புப் பணியில் சிக்கல்; மாற்று இயந்திரம் மூலம் மீட்பு

தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கயிறுகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை மீட்க முயன்றனர். ஆனால், சேற்றில் சிக்கியிருந்த யானையை மீட்கச் சென்ற பொக்லைன் இயந்திரமும் அதே சேற்றில் சிக்கியதால் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மாற்று ஏற்பாடாக ஹிட்டாச்சி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு யானை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. நீண்ட நேரம் சேற்றில் சிக்கியதால் யானை மிகவும் சோர்வடைந்து எழுந்து நிற்க முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் இருந்து வந்த வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர், யானைக்கு குளுக்கோஸ் மற்றும் அவசர சிகிச்சை அளித்து அதன் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.